Thursday, 4 September 2008

சுள் என சுட்ட மழை!

இந்த உலகத்தில் நான்! எனக்குள் ஓர் உலகம்!

தனிமையும்,அமைதியும் என்னை "என்" உலகத்திற்கு

அழைத்து சென்றது!

மேகங்கள் கட்டி அணைக்க,

மரங்கள் முத்தமிட,

வெட்கத்தில் சிவந்தது வானம்!

பொறாமையில் பறவைகள் கீச் கீச் என கிசு கிசுக்க,

மின்னலை அக்னியாக்கி இயற்கை இன்று எழுதிய காதல் அதியாயம்!

காதலின் உச்சியில் பொழிந்தது பேய் மழை!

காதலின் அடையாளச் சின்னமாய்!

காற்றுக்கு இசைந்து மழை நடத்தியது ஓர் அரங்கேற்றம்!

என் உலகத்தில் எங்கே நான்?அதோ! ஒரு கூரை

பள்ளிக்கூடத்தில்,மண் சுவற்றில் ,காற்று நுழைய இட்ட

துவாரத்தின் வழியே ஏக்கத்துடன் எட்டி பார்த்துக்கொண்டு...

பள்ளிக்கூடத்தின் கடைசி மணி அடிக்க காத்திருந்த படி...

மணி ஒலித்தது!

சல்லிக்கட்டில் களம் இறங்கும் காளை போல், துள்ளிக்குதித்து ஓடியது மனம்!

அதை தொடர முயற்சித்தது என் கால்கள்!

மழையோடு உறவாடி நின்றேன்!

என் மேல் விழும் ஒவ்வொரு துளியையும் இரசிக்க சற்றே கண் மூடினேன்!

கண் திறந்து பார்த்தால்....

வீட்டின் கூரையில் வைக்கோல் கூறுகள் விலகியதால்

மழை என்னை உண்மையில் நனைத்துக் கொண்டிருந்தது!

மெய் மறந்து நான் உறங்கினாலும்

"மெய்" மறைவதில்லை!

No comments: